×

கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து மரத்தில் பலாப்பழம் பறித்து சாப்பிட்ட காட்டு யானை: வனத்துறையினர் விரட்டி அடித்தனர்

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை பலா மரத்தில் பலாப்பழம் பறித்து சாப்பிட்டது. அதை வனத்துறையினர் விரட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குவதால், பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்த காட்டு யானை கடந்த 4 நாட்களாக நடூர் கிராம பகுதியில் முகாமிட்டுள்ளது. அங்குள்ள மக்காச்சோள காட்டுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

நேற்று மதியம் அப்பகுதியில் பலா மரத்தில் உள்ள பலா பழத்தை தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டது. மேலும் மரக் கிளைகளை முறித்து சாப்பிட்டதை பார்த்து ஏராளமான கிராம மக்கள் அங்கு குவிந்தனர். இதையறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை பார்க்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ஆனால், யானை மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கியது. ஊருக்குள் புகுந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து மரத்தில் பலாப்பழம் பறித்து சாப்பிட்ட காட்டு யானை: வனத்துறையினர் விரட்டி அடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Kadampur hillside ,Sathyamangalam ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை